இராணுவத்தில் குற்றம் செய்தோர் தண்டிக்கப்பட்டாலேயே இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்க முடியும்

இராணுவத்தில் குற்றம் செய்தோர் தண்டிக்கப்பட்டாலேயே இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்க முடியும்

Wednesday, June 7, 2017
கடத்தல், கொலை, கப்பம் போன்ற குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்கள் எந்த அடையாளத்துடன் இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கல சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இராணுவத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட சில கறுப்பு ஆடுகள் இருக்கலாம்.
அவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டாலே இராணுவத்தின் நற்பெயரைக் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.
ஜெனீவா பிரேரணை தொடர்பில் தினேஷ் குணர்வத்தன எம்பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜெனீவா ஒப்பந்தத்தில் வெ ளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் கைச்சாத்திட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டது. எந்தவொரு ஒப்பந்தத்திலும் நாம் கைச்சாத்திடவில்லை. நாட்டிலுள்ள சக பிரஜைகளின் நன்மை கருதி சில விடயங்களை நிறைவேற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டது. இதனாலேயே அரசாங்கம் அப்பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை இணை அணுசரனை வழங்கிய இந்த தீர்மானத்தில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையின் பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனவே எதிரணியில் உள்ளவர்கள் பொய் கூறி மக்களை திசைதிருப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இணை அணுசரனை வழங்கிய இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு 48 நாடுகள் ஆதவளிக்க முன்வந்திருந்தன. இந்த நகர்வில் இலங்கையை பல்வேறு நாடுகளும் பாராட்டியுள்ளன.
ஆனால், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மகிந்த ராஜபக்‌ஷவும் அவரை சுற்றியுள்ள அவரது ஆலோசகர்களும் தான் தற்போது பதற்றமடைந்துள்ளனர். நாட்டின் இறையாண்மை பற்றி இவர்கள் பேசுகின்றனர். ஆனால், அன்று ஐ.நா. விசாரணைக்கு இடமளித்து இவர்கள் தான் நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்தனர். எனினும், அதிகாரத்தை இழந்தவர்கள் இனங்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர்.
அரசாங்கம் என்ற வகையில், பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் தொடர்பான பொறுப்பு எமக்கு இருக்கிறது. நாம் அந்த பொறுப்பை ஏற்று செயற்படுவோம். இராணுவம் இதில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அச்சப்பட தேவையில்லை. இந்த செயற்பாட்டின் மூலமே எமது இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்க முடியும்.
எம்மிடம் சிறந்த இராணுவமொன்று இருக்கிறது என்பதை சகலரும் நன்கறிவர். ஆகையால் தான் ஐ.நா. அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்க எமது இராணுவத்தினருக்கு இடம் கிடைக்கிறது. எனினும், எந்தவொரு சிறந்த இராணுவத்திலும் கறுப்பு ஆடுகள் இருக்கலாம். அவ்வாறானவர்களை தண்டிக்கும் போது தான் இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்க முடியும். கிறிசாந்தி கொலை சம்பவத்தின் போது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட படை வீரருக்கு தண்டனை வழங்கப்பட்ட போது தான் முழு இராணுவத்தின் நற்பெயரும் பாதுகாக்கப்பட்டது.
லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்
Advertisements
Categories: Uncategorized

Post navigation

Comments are closed.

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: